வாசிக்கத் தேவையான நேரம் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 14 செக்கன்களும் தேவைப்படும்.)

அண்மையில் எனது வலைப்பதிவிற்கு நீங்கள் வருகை தந்திருப்பீர்களாயின், புதியதொரு மாற்றமொன்றை அவதானித்திருப்பீர்கள். பலரும் இந்த மாற்றத்தை அவதானித்து, இதை எப்படி செய்தீர்கள்? அருமையாய் இருக்கிறதே என்றெல்லாம் மறுமொழி, மின்னஞ்சல் என்பன மூலம் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அந்த புதிய விடயமென்ன? அதன் நன்மைகள் என்ன? அதனை எவ்வாறு செய்தேன்? அதற்கான காரணங்கள் என்ன? நீங்கள் அதனை உங்கள் வலைப்பதிவிற்கு எவ்வாறு செய்து கொள்ளலாம் என்பன பற்றி நாம் அலசுவோம்.

இப்போது, இந்தப் பதிவின் ஆரம்பத்திலும், இந்தப் பதிவை வாசிக்கத் தேவையான நேரம் பற்றிய குறிப்பைக் கண்டிருப்பீர்கள். இந்தப் புதிய விடயம் சார்பாகவே பலரும் ஆர்வம் வெளிப்படுத்தினார்கள். உண்மையில் வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின்றனர்.

ஜெகொப் நீல்சன் என்கின்ற இணைய பயனர்களின் வழக்கங்கள் பற்றி ஆராயும் விற்பன்னர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்த ஆய்வின்படி ஒரு வலைப்பதிவிற்கு வரும், வாசகர் அங்குள்ள பதிவொன்றின் 18 சதவீதத்தை மட்டுமே வாசிக்கிறார். எவ்வளவுதான் வலைப்பதிவர்கள் சிரமப்பட்டு எழுதி, சரி பிழை பார்த்து, தொகுத்து வெளியிடும் பதிவுகளின் முதல் இரண்டு பந்திகள் மட்டுந்தான் பொதுவாக அநேகமானோரால் வாசிக்கப்படுகின்றன. இது கவலையான விடயந்தான்.

இதற்கான முதன்மைக் காரணமாக பதிவின் நீளத்தைக் கண்டு வாசகர்கள் பயப்படுவதைச் சொல்லலாம். ஆக, இந்தப் பயத்தை வாசகர்களிடமிருந்து போக்கி, எப்படி அவர்களை 18 சதவீதத்திற்கும் அதிகமாக வாசிக்கச் செய்யலாம் என்பதே இப்போதைய கேள்வி.

பதிவுகள் பல நேரங்களில் நீளமாகத் தோன்றுவதற்கு இன்னொரு காரணம், அதில் சேர்க்கப்படும் நிழற்படங்களாகும். ஆனால், நிழற்படங்கள் சேர்க்காமல் பதிவெழுதுவது என்பது பொருத்தமான விடயமல்ல. ஆக, நீளமாகத் தோன்றினாலும், இந்தப் பதிவை வாசிக்க உங்களுக்கு இவ்வளவு நேரம் தான் தேவைப்படும் என்பதை வாசகருக்கு ஆரம்பத்திலேயே சொல்லிவிடும் போது, “இரண்டு நிமிடத்துக்குள் வாசித்திடலாமா?” என்று தன்னை கேட்டுக் கொண்டு, ஒரு அலுப்புமில்லாமல் வாசகர் வாசித்து முடிக்க ஆரம்பிக்கிறார்.

ஆக, வாசிக்கத் தேவையான நேரத்தை ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்தில் சேர்ப்பது உஷிதமானது. ஆனால், வாசிக்கத் தேவையான நேரத்தை எவ்வாறு கணித்துக் கொள்வது என்ற இன்னொரு கேள்வி இவ்விடத்தில் எழுகிறது.

அதற்கும் வழியுள்ளது. பாடசாலையில் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் பிள்ளையொன்று வாசிக்கும் வேகத்திற்கும், பெரியோர்கள் வாசிக்கும் வேகத்திற்கு அவ்வளவு வித்தியாசமில்லை. மிகவும் வேகமாக வாசிக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இங்கு பொதுமைப்பாடான வாசிப்பு வேகமாக நிமிடத்திற்கு 200 சொற்கள் கருதப்படுகிறது.

அதனடிப்படையில், எமது பதிவிலுள்ள சொற்களின் எண்ணிக்கையை அந்த நியமமான அளவைக் கொண்டு கணிப்பு செய்வதால், பதிவை வாசிக்கத் தேவையான மொத்த நேரத்தை கண்டு கொள்ள முடியும். அப்படியானால், இதனை கணித்துக் கொள்ள ஏதாவது இலகுவான வழியுண்டா? என்ற கேள்வி இந்நிலையில் உண்டாகிறது.

வாசிக்கத் தேவையான நேரத்தைக் கணிக்கும் வகையில் நானொரு இணைய செய்நிரலொன்றை உருவாக்கி எனது கணினியில் பயன்படுத்தி வந்தேன். இப்போது அதனை கொஞ்சம் மெருகேற்றி, நீங்களும் உங்களது பதிவுகளை வாசிக்கத் தேவையான நேரத்தை கணிக்கக் கூடிய வகையில் செய்து எனது இணையத்தளத்தில் சேர்த்திருக்கிறேன். Read-o-Meter என்று அதற்கு பெயரும் வைத்துள்ளேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பதிவை Copy செய்து, குறித்த இடைமுகத்தில் Paste செய்து, Button கிளிக் செய்யும் போது, குறித்த பதிவை வாசிக்கத் தேவையான நேரம் திரையில் காட்சியாகும்.

பதிவொன்றை வாசிக்கத் தேவையான நேரத்தை பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிடும் நிலையில், வாசகர்கள் உங்கள் வலைப்பதிவில் அதிக நேரம் தரித்திருந்து பல பதிவுகளையும் வாசிக்கத் தொடங்குவர். இது எனக்கு நடந்தது. உங்களில் பலரும் “இந்த நேர அளவை நீங்கள் எவ்வாறு கணித்தீர்கள்?” என்று விசாரிக்கும் அளவிற்கு இந்த விடயம் அவர்களை கவர்ந்ததிருந்தது.

நீங்கள் எழுதும் பதிவுகள் வாசிக்கப்பட வேண்டும். நீளமாயிருக்கிறதே என்ற ஒரேயொரு காரணத்திற்காக அவை வாசிக்கப்படாமல் இருக்கப்படாது. Read-o-Meter ஐ பயன்படுத்தி, உங்கள் வலைப்பதிவிலுள்ள பதிவுகளுக்கும் அவற்றை வாசித்தத் தேவையான நேரத்தை அளவிட்டு ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும் சேர்த்துவிடுங்கள். உங்கள் கருத்துக்களையும் அறியும் ஆவலெனக்குண்டு.

பின்குறிப்பு: அண்மையில், புதுநுட்பம் என்றொரு நுட்பம் சார்ந்த YouTube channel ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். அது நுட்பங்களைத் தமிழில் தரும் இன்னொரு முயற்சியல்ல. புதுமையானது. அங்கும் வந்து வணக்கம் சொல்லுங்கள்.

– உதய தாரகை

4 thoughts on “வாசிக்கத் தேவையான நேரம் என்ன?

  1. நல்ல விசயம்… பதிவு எழுதிற பதிவர்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

    (என்னைப்போல பதிவு எழுதாத பதிவர்களுக்கு இலகுவா பதிவு எழுத ஏதாவது செய் நிரல் இருக்கிறதா… 🙂 )

  2. வாங்க நிமல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    (அதற்கும் RSS feed ஐ சேர்த்துத் தொகுப்பதாய் ஒரு செய்நிரல் பண்ணிடுவோமா? – ஹா.. ஹா..)

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  3. ஆமங்க தாரிக்…
    நானும் பல முறை யோசித்ததுன்டு..
    ஏன் இவரு வாசிக்க தேவையான நேரத்தையும் சேர்த்தே எழுதுராருனு…
    இப்பதான் புரியுது அது ஒரு நுட்பம் என….
    really great thariqe..
    proud of u…
    வாழ்க‌…..

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்