வாசிப்பு: மனச்சித்திரங்களின் வானம்

“நான் வாசித்த அனைத்தினதும் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன்,” என்று தியோடர் ரூஸ்வெல்ட் சொல்கிறார்.

இன்று உலக புத்தக தினம்.

உங்கள் வாழ்வில் நூல்கள் தரக்கூடிய தாக்கம் மிக முக்கியமானது.

வாசிப்பின் தேவையை பூர்த்தி செய்கின்ற வழி நூல்கள்.

உங்கள் யோசனைகளின் தோற்றுவாயாக மனச்சித்திரங்கள் வரும்.

அந்த மனச்சித்திரங்களின் விசித்திரம், வாசிக்கின்ற நூல்கள் மூலமே நெறியாள்கை செய்யப்படுகிறது.

உங்களின் வாழ்க்கையின் வருங்கால பெறுமதியை நிர்ணயிக்கும் கூறுகளாக நீங்கள் வாசிக்கும் நூல்கள் இருக்கின்றன.

உடலுக்கு உடற்பயிற்சி எப்படி வலிமை சேர்க்கிறதோ,

மூளைக்கு வலிமை சேர்ப்பது வாசிக்கும் உங்கள் செயலாகிறது.

புத்தகங்களை வாசிக்கும் உங்களின் தேட்டம், உங்களின் ஞாபகங்கள், யோசனைகளை நெறிப்படுத்தும்.

அடுத்தவரின் கவலை, வாழ்வை அறிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பை வாசிப்பு கொண்டு தரும்.

உங்களுக்கே உரித்தான யோசனைகளை உருவாக்க உபயமாக வருவது நீங்கள் வாசிக்கும் நூல்கள் தாம்.

உங்களின் மனத்தின் அமைதியையும் ஓர்மையையும் சாத்தியமாக்கும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு.

வாசிப்பது என்பது, மனச்சித்திரம் வரைவதாகும்.

புத்தகங்கள் வேண்டி நிற்பது செயலை; அவை சொல்பவற்றை மனத்தில் கொண்டுவரும் ஆற்றலை.

மனவுளைச்சலை 68 சதவீதம் குறைக்கக்கூடிய ஆற்றல், புத்தகங்களை வாசிப்பதால் தோன்றுகிறது என,

இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்கின்றன.

மூளையை கட்டமைத்து, நீண்ட நாள் நினைவுகளை தேக்கி வைப்பதை, புத்தக வாசிப்பு கூர்மைப்படுத்துகிறது.

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களை போரின் வடுக்களிலிருந்து மீள வைப்பதற்காக,

அமெரிக்க நூலக சேவை, இராணுவ வீரர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாசிக்கச் செய்தது.

அந்த வீரர்களின் மனத்தில் அமைதியும், ஆர்வமும், அழகியலும் தோன்றியது என்பது வரலாறு.

ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டுமென நீங்கள் எண்ணியிருக்கலாம்.

ஆனால், அதைத் தொடங்குவது உங்களால் முடியாமல் போயிருக்கலாம்.

இன்று அதற்கான நேரம், நீங்கள் விரும்பிய அந்தப் புத்தகத்தை கையில் எடுங்கள்.

ஓரிரண்டு பக்கங்கள் வாசியுங்கள்.

ஒவ்வொரு நாளும் வாசியுங்கள்.

சின்னச் சின்னதாய் தொடங்குங்கள். சிகரம் எட்டுவீர்கள்.

வாசித்தவைகளை உங்களை நேசிப்பவர்களோடு பகிருங்கள்.

உங்கள் மனத்தில் தெளிவு பிறக்கும், மூளையில் நினைவு மையம் கொள்ளும்.

நல்ல புத்தகங்களை வாங்குங்கள். அல்லது நூலகங்களில் இருந்து இரவல் எடுங்கள்.

PDF ஆய் கேட்காதீர்கள். PDF ஆக பகிராதீர்கள்.

முடிந்தால், Kindle ஒன்றை வாங்குவதில் முதலீடு செய்யுங்கள்.

எல்லாம் நெறிப்படும்.

கல்யாண்ஜியின் இந்தக் கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

“ஆறே
பார்க்காதவர்களை
அருவி
பார்க்காதவர்களை
கடல்
பார்க்காதவர்களை
எப்போதும்
பார்த்துவிடுகிறது
மழை.”

இந்தச் சாதாரண வரிகளை வாசிக்கின்ற போது,

உங்களில் தோன்றும் மனச்சித்திரத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா?

தாரிக் அஸீஸ்
23.04.2021

வாசியுங்கள்.

விவேக்: மனங்களையும் மரங்களையும் வளர்த்தவர்

“நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு சிவாஜி” என்ற ஒற்றை வசனத்தில் அரசியல் பேசியவர்.

“நீங்க நம்பர் பிளேட் என்ன கலரென்று முடிவு பண்ணுங்க. அப்புறம் நான் மாட்டுறன்” என்ற வசனம் மூலம், தான் வாழும் சூழலின் ஆட்சி மாற்றத்தின் அலப்பறைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்தவர்.

சினிமாக் கலையில், தான் பயணிக்கும் காலத்தைப் பிரதிபலிப்பதாய் அவரின் வசனங்களை அமைத்தவர்.

“எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்” என்ற வசனத்தை நீங்கள் பாவிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

சமூகத்தின் அறியாமையை கண்டு, “ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களயெல்லாம் திருத்தவே முடியாது” என்று தனது கோபத்தை வெளிக்காட்டியவர்.

“உள்ளுக்குள்ள ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு அதுல ஓடாத வண்டியாடா இந்த ஒத்த எலுமிச்சம் பழத்துல ஓடப்போகுது?” என்று மூடநம்பிக்கைகளை கேலி செய்தவர்.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள், கேள்விப் படும் சம்பவங்களை தன் பாணியில் காட்சியில் கொண்டு வரும் அவரின் சமயோசிதம் உச்சமானது.

“எனக்கு ஐஜி எ நல்லாத் தெரியும். ஆனா அவருக்கு என்னத் தெரியாது” என்ற வசனத்தில் மனிதர்களின் போலியான விம்பத்தை கிழித்தவர்.

“யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்குறா நீ டீ ஆத்துற? உன் கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையடா?” என்று மனிதர்களின் சமூகம் பற்றிய புறக்கணிப்பை எள்ளி நகையாடிவர்.

“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகடா இது. உயிரோடு இருக்கும் போது, ஒரு வாய் தண்ணி தரமாட்டான். ஆனா, செத்து போயிட்டா வாயில பால ஊத்துற உலகம் டா இது” என்று வாழ்வின் நவீன முரணை பேசியவர்.

“எங்க மக்கள் பாவம் சார். பீஎம்பீ – Poor Memory People. எதையும் சீக்கிரம் மறந்துடுவாங்க” என்று மக்களின் மீதான ஆதங்கத்தைப் பதிவு செய்தவர்.

நவீன சினிமாவில் வசனங்களால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.

“அவா.. அவா என்டு சொல்லிறியலே.. யாரு அந்த அவா அரிசி கோதுமை எல்லாம் ரவா. அதை வெளைய வெக்கிறது அவா. மொத்தத்தில அவா இல்லன்னா நமக்கு ஏதுகாணும் புவா?” என்று முடியும் நீண்ட காட்சியில் தோன்றி, சாதி, வர்ணம் என்பதைப் பற்றிய தீய பார்வையையும் எண்ணத்தையும் சாடியவர்.

பத்மஶ்ரீ விவேக் அவர்களின் சினிமா மூலமான வசனங்களின் வாசிப்பை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சமூகப் பொறுப்பு, கல்வி, சமூக நீதி என்பன பற்றி கருத்துக்கள் சொல்வதோடு நிற்காமல், செயல்வடிவம் கொடுத்தவர்.

“பசுமை கலாம்” செயற்றிட்டம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

ஒரு கோடி மரங்களை நடும் இலக்கோடு, அவர் மரணிக்கும் வரையில் 33 இலட்சம் மரங்களை நட்டவர்.

காலம், அவரை பல தலைமுறைகளுக்கு காவிக் கொண்டு வலம் வந்து கொண்டேயிருக்கும்.

விவேக் அவர்கள் தா. பா அவர்களின் மறைவின் போது, ட்வீட் செய்தது, அவருக்கும் பொருந்திப் போகிறது.

“எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!!”

விவேக் அவர்களின் நீங்கள் விரும்புகின்ற இங்கு நான் குறிப்பிட மறந்த அல்லது விடுபட்ட வசனங்கள் இருந்தால் மறுமொழியில் சொல்லுங்கள்.

தாரிக் அஸீஸ்
17.04.2021

May be an image of one or more people, people sitting, people standing and indoor
டாக்டர் அப்துல் கலாமுடன் பத்மஶ்ரீ விவேக்

புறக்கணிக்கும் கலை

Lighted Matchstick on Brown Wooden Surface
கவனக்குவிப்பு கட்டாயம் தேவை

மனத்தை கவனக்குவிப்பு அடையச் செய்வது கடினம்.

பலதும் பலவாறு உங்களின் கவனத்தை பெறப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த ஆதிக்கத்திலிருந்து தப்பித்து, உங்கள் கவனத்தை குவிக்கச் செய்வது சுலபமில்லை.

புறக்கணித்தலில் தேர்ச்சி பெறுவதே கவனக்குவிப்பின் ஆதாரம்.

புறக்கணித்தலா?

புறக்கணிப்பு என்பது கூடாத பண்பல்லவா?

எதைப் புறக்கணிக்கிறோம் என்பதிலேயே அதன் நன்மை, தீமை பற்றிய விலாசம் கிடைக்கிறது.

தேர்ந்து புறக்கணிப்பதில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

உங்கள் நேரத்தை வீணாக்கும் செயல்களைப் புறக்கணியுங்கள்.

உங்களை ஆற்றலை மழுங்கடிக்கும் மனிதர்களைப் புறக்கணியுங்கள்.

உங்கள் கவனத்தை சிதறடிக்கும் தகவல்களைப் புறக்கணியுங்கள்.

உங்களை நீங்களல்லாத இன்னொன்றாக மாற்ற முனையும் எண்ணங்களைப் புறக்கணியுங்கள்.

உங்கள் வாழ்வின் ஓட்டத்தில் பயன்படாத பொருள்களைப் புறக்கணியுங்கள்.

உங்களின் தெரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் விளம்பரங்களைப் புறக்கணியுங்கள்.

உலகம் பரந்து விரிந்தது. தெரிவுகள், வாய்ப்புகள் என தாராளமாய் மலிந்து கிடக்கின்றன.

நீங்கள் செய்யும் தெரிவில்தான் உங்கள் அடுத்த நிமிடம் செதுக்கப்படுகிறது.

புறக்கணிப்பு என்பதுவும் ஒரு தேர்ச்சியான தெரிவு தான்.

பலதும் உங்கள் கண் முன்னே கிடக்கிறது என்பதால், எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்பதில்லை.

தேர்ந்து புறக்கணிக்க பழகுங்கள்.

தேர்ந்து புறக்கணிப்பதில் தேர்ச்சி பெறும் போது, வாய்ப்புகள் வசந்தம் கொண்டுதரும்.

கவனம் அப்போது, ஒருமிக்க குவிந்து கிடக்கும்.

எதையெல்லாம் இன்றிலிருந்து புறக்கணிக்கப் போகிறீர்கள்?

தாரிக் அஸீஸ்
15.03.2021

வாழ்வைக் கொண்டாடும் பாடம்

பூமி, வாழ்க்கை, பூர்வகுடிகள் என அனைத்தையும் கொண்டாடுகிறது எஞ்சாய் எஞ்சாமி!

அறிவின் வரிகளில் அடர்த்தியும் ஆழமும் உச்சமாக அமைந்துள்ளது.

நாலடிகளில் நாகரிகம், பூமி வரலாறு, விவசாயிகளின் வாழ்வின் துயர் என பலதையும் விபரிக்கும் விதம் – கவிதை.

அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணைக் கொடுத்தானே பூர்வகுடி!

கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி!

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே!

அறிவு – தெருக்குரல்

“தீ” மற்றும் “அறிவு” தந்துள்ள பாடல் — இது பாடம்.

ஏ. ஆர். ரகுமானின் செயற்றிட்டமான தன்னார்வ இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் மாஜாவினால் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

எஞ்சாய் எஞ்சாமி

என்ன செய்யப் போகிறீர்கள்?

நாளையுடன் பெப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

2021இன் இரண்டு மாதங்கள் நிறைவாகி, 10 மாதங்கள் எஞ்சியிருக்கின்றன.

கடந்து முடிகின்ற இரண்டு மாதங்களில் எதையெல்லாம் உருவாக்கியுள்ளீர்கள்?

எவற்றையெல்லாம் சாதித்துள்ளீர்கள்?

புதிதாகக் எவற்றைப் பற்றியெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?

இலக்குகள் இருந்தாலும், அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான பொறிமுறைகளை தயார் செய்தீர்களா?

தயார் செய்த பொறிமுறைகளில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய அறிதல் தோன்றியதா?

முறைப்பட்டுக் கொண்டிருக்காமல், படைத்தலின் மூலம் பரவசம் அடைந்து கொள்ள முடிந்ததா?

விரியும் கேள்விகள் ஏராளம்.

உங்களின் அடுத்த நிமிடம் இந்தக் கேள்விகளுக்கான விடைகளோடு தொடங்கட்டும்.

இந்த ஆண்டு தொடங்கிய நாளிலிருந்து, நான் ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும், எழுதியதை உங்களோடு பகிர வேண்டுமென இலக்கைக் கொண்டிருந்தேன்.

2006 ஆம் ஆண்டிலிருந்து நிறம் வலைப்பதிவில் நான் தொடர்ச்சியாக எழுதி வந்தாலும், ஒரேயொரு தடவையே மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் எழுதி பதிவு செய்திருந்தேன்.

அந்த அனுபவத்தை இந்த ஆண்டில் தொடரவே இந்தச் சவாலை எனக்குள் ஏற்றிக் கொண்டேன்.

இந்த இலக்கை அடைவதற்கான பொறிமுறையையும், ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியவைகள் என்ன என்பது பற்றிய தெளிவையும் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு நாளும் எழுதினேன். பலதையும் எழுதினேன். அவற்றில் தெரிவு செய்தவைகளைப் பகிர்ந்தேன்.

சமூக ஊடகங்களின் பரப்பில் புதிதாய் பலரினதும் அறிமுகங்கள் கிடைத்தது. புதிய வாய்ப்புக்களை ஈட்டித் தந்தது.

குறிப்பாக, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய தளங்களில் என் எழுத்துக்களின் வருவிளைவுகள் சென்று வசந்தம் கொண்டு தந்தது.

இன்றும் எழுதுகிறேன்.

இப்படி நீங்கள் கொண்ட இலக்குகளை அடைந்து கொள்ள இலகுவான வழி ஒன்றேயொன்றுதான்.

செயலில் வரவேண்டியது இரண்டு சொற்கள் தான்.

“சிறியதாகத் தொடங்குங்கள்.”

எழுத வேண்டுமா? ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 நிமிடங்கள் எதையாவது பற்றி எழுதுங்கள். காலப்போக்கில், எல்லாமே அற்புதமாக நெறியாள்கை செய்யப்படும்.

எழுதுவதென்பது தியானம். நீங்கள் உங்கள் எண்ணங்களோடு பேசுகின்ற தருணம்.

எண்ணங்கள் என்பது நீங்களல்ல. நீங்கள் வேறு. உங்கள் எண்ணங்கள் வேறு.

நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் எண்ணங்களோடு நீங்கள் பேசுகிறீர்கள் என்று அர்த்தம்.

யோசிப்பதை சீரமைப்பதுதான் எழுத்து. எழுதும் போதுதான் உங்கள் எண்ணங்களுக்கு தெளிவு கிடைக்கிறது. ஐயங்கள் அகல்கிறது. புதியவைகளைக் கற்றுக் கொள்வதற்கான அவகாசம் தோன்றுகிறது.

“ஒரு மலையை அசைப்பதற்கு எத்தனிப்பவன், முதலில் சிறிய கற்களை அப்புறப்படுத்துவதில் இருந்தே தொடங்குகிறான்.” என்று கன்பியூசியஸ் சொல்கிறார்.

இங்கு தேவை எண்ணங்களின் சீராக்கம். அதை யாரும் உங்களுக்காக செய்யப் போவதில்லை. வேண்டுமென்றால், மற்றவர்கள் உங்கள் எண்ணங்களுக்குள் குழப்பத்தையே விதைக்கலாம்.

உங்கள் எண்ணங்களை சீராக்குவதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.

இன்று என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை பெப்ரவரி 28.

தாரிக் அஸீஸ்
27.02.2021

எனது நாளாந்த எழுத்துக்களை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம். https://www.facebook.com/tharique.azeez/

Selective Focus Photography of Hour Glass
நேரமே கொஞ்சம் நில்லாயோ?

பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட திருப்புமுனை: அறிவோம் தெளிவோம்

என்னதான் நடக்கிறது?

வீடியோ விளையாட்டுக்களை டீவீடீயாக விற்பனை செய்து வந்த நிறுவனம்தான் GameStop.

இணையத்தின் ஆதிக்கம் இருக்கும் இக்காலத்தில் டீவீடீகளை விற்பனை செய்தால் இலாபம் கிடைக்குமா என்ன?

பெருந்தொற்றுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி GameStop மிகப்பெரும் நட்டத்தில் இயங்கியது.

ஆனால், இந்த வாரம் இந்த நிறுவனத்தின் பங்குகளின் அதீத விலையுயர்ச்சியால் நியுயோர்க்கின் வோல் ஸ்ட்ரீட் பங்குசந்தை கதிகலங்கியுள்ளது.

நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதியுச்சமானது எப்படிச் சாத்தியமாகியது?

இந்தச் சம்பவம், உலக வரலாற்றின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லிவிடலாம்.

இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ள, பங்குச் சந்தையின் நடவடிக்கைகளில் “Short” என்ற நிலை பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும்.

பங்குச் சந்தையில் Short எனப்படுவது, ஒரு பங்கை நீங்கள் தரகரிடம் இரவல் வாங்கி, அதன் விலை குறையும் என்ற நம்பிக்கையில் உடனடியாக அதனை விற்கிறீர்கள். இதன் முக்கிய நோக்கம், பங்கின் விலை குறைந்ததும் விற்ற பங்கை குறைந்த விலைக்கு வாங்கி, இரவல் வாங்கிய பங்கை தரகருக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை இலாபமாக எடுத்தக் கொள்வதாகும்.

உதாரணமாக, A என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய விலை 10 ரூபா என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பங்கை தரகரிடமிருந்து இரவல் எடுத்து, உடனடியான 10 ரூபாய்க்கு விற்றுவிடுகிறீர்கள்.

இப்போது உங்களிடம் 10 ரூபாய் பணம் இருக்கிறது. அத்தோடு நீங்கள் தரகரிடமிருந்து வாங்கிய ஒரு பங்கு அவருக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற தேவையும் இருக்கிறது.

இப்போது, A என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 6 ரூபாவாக குறைந்துள்ளது என வைத்துக் கொள்வோம். இப்போது, நீங்கள் ஏற்கனவே விற்ற பங்கை 6 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். தரகரிடம் இரவலாக வாங்கிய பங்கையும் திருப்பி கொடுத்தும்விடுகிறீர்கள்.

இங்கு, நீங்கள் 10ரூபாய்க்கு விற்ற பங்கை, மீண்டும் வாங்க உங்களுக்குச் செலவானது 6 ரூபாய் தான். ஆக, 4 ரூபாய் இலாபமாக உங்களுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

இது இப்படியிருக்க, இங்கு பங்கின் விலை குறைந்தது போல், பங்கின் விலை கூடினால் என்ன நடக்கும்?

நீங்கள் இரவலாக வாங்கிய பங்கை தரகருக்கு வழங்கத்தான் வேண்டும். 10ரூபாய்க்கு விற்ற பங்கின் தற்போதைய விலை 15 ரூபாய் என்றால், நீங்கள் மேலதிகமாக 5ரூபாய் சேர்த்துத்தான் 15ரூபாய்க்கு அந்தப் பங்கை மீண்டும் வாங்க வேண்டும். அப்போதுதான் இரவல் வாங்கிய பங்கை தரகருக்கு திரும்பித் தர முடியும். இங்க உங்களுக்கு 5 ரூபாய் நட்டம் ஏற்படும்.

ஆனால், இதிலிருக்கின்ற சுவாரஸ்யம், 15ரூபாயாகத்தான் பங்கின் விலை இருக்குமென்பதில்லை. அது எவ்வளவு வேண்டுமானாலும் கூடிக் கொண்டே செல்லலாம். அப்படியானால், பங்கின் விலையுயர உயர, நட்டமும் கூடிக் கொண்டே செல்லும். அதனால், விற்ற பங்குகளை வேகமாக வாங்கி தரகரிடம் மீண்டும் தரவேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படும்.

இனி GameStop இல் இது எப்படி நடந்தது எனப் பார்ப்போம்.

GameStop இன் பங்குகளை Short முறையில் கையகப்படுத்தி அதிக இலாபமீட்டுவதையும் அதன் மூலம் GameStop ஐ கடன்தீர்க்க முடியாத நிலைக்குத் தள்ளுவதற்கும் Hedge Fund முனைப்புக் காட்டியதை, Reddit இணையத்தளத்திலுள்ள ஒரு பிரிவான WallStreetBets என்ற தன்னார்வலர்கள் கடந்த சில வாரங்களாக அவதானித்தனர். இதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவு செய்தனர்.

WallStreetBets என்கின்ற Reddit இணையக் குழுமத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் செயல்நிலையில் இருக்கிறார்கள்.

அங்குள்ள உரையாடல்களில், GameStop இன் பங்குகளை அதிகமதிமாக வாங்குமாறு செய்திகள் பரிமாறப்பட்டன. தங்களால் முடியுமான அளவுக்கு GameStop இன் பங்குகளை வாங்குமாறு குழுமத்திலுள்ளவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

GameStop பங்குகள் வேகமாக வாங்கப்பட்டன. பங்குகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், Short முறையில் இலாபமீட்டிய Hedge Fund பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை இழக்கத் தொடங்கியது. Hedge Fundஇன் மொத்தப் பெறுமதியான 13.1 பில்லியன் டொலர்களைத் தாண்டி அவர்கள் அடைந்த நட்டம் உயர்ந்தது.

தமது Short நிலையிலிருந்து மீள்வதற்கு, Hedge Fund வேகமாக GameStopஇன் பங்குகளை அதிகமான விலையில் திரும்ப வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பங்குகளின் விலை இன்னமும் கூடியது. இந்த நிலைதான் பங்குச் சந்தை நடவடிக்கையில் ‘Short Squeeze’ எனப்படுகிறது.

இப்போது, Hedge Fund தாம், கடன் தீர்க்க முடியாத நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளது. ஏனைய Hedge Fund நிலைகளும் இந்த இணையப் பயனர்களின் ஏற்பாட்டால் கதிகலங்கலாம் என்ற பயத்தில் Short நிலையின் எதிர்ச் சம்பவங்கள் பங்குச் சந்தையில் வெவ்வேறு வகையில் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் இணைந்து பங்குச் சந்தையில் இப்படி மாற்றத்தைக் கொண்டுவருவது சட்டவிரோதமானது என வோல் ஸ்ட்ரீட் அழத் தொடங்கியுள்ளது. எப்படியாயினும், சாதாரண மக்களின் சக்தியின் முன்னால், வோல் ஸ்ட்ரீட்டின் செல்வந்த ஜாம்பவான்கள் தோற்றுப் போயுள்ளதே இங்கு நடந்தேறியுள்ளது.

இதையொரு நவீன தாவீது கோலியாத் கதையென்றே சொல்ல வேண்டும்.

தாரிக் அஸீஸ்
30.01.2021

கோலியாத்தை வீழ்த்தி தாவீது.

கவனத்தை ஆளுவது எப்படி?

நீங்கள் புதிய மொழியொன்றில் பிழையில்லாமல் எழுதுவதற்கு பயிற்சி எடுக்க முடிவுசெய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

எழுதுவதற்கு ஒரு குறிப்புப் புத்தகம் தேவைப்படுகிறது. புத்தகக் கடைக்கு செல்கிறீர்கள்.

புது வகையான அழகழகான குறிப்பபுப் புத்தகங்களைக் காண்கிறீர்கள்.

அவற்றில் சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறக் குறிப்புப் புத்தகங்கள் உங்களைக் கவர்ந்துள்ளன. இதில் எதைத் தெரிவு செய்வது என்று உங்களுக்குள்ளேயே விவாவதம் செய்கிறீர்கள்.

அப்போது, எதிரே கண்ணுக்கு அழகான பேனாவொன்று தெரிகிறது. இறுதியில் பேனாவை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுகிறீர்கள்.

இனி, அந்த வாரம் முழுக்க எந்த நிறக் குறிப்புப் புத்தகத்தை வாங்கலாம் என்ற தெரிவின் சமர், உங்கள் தலைக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது. இனியென்ன, ஒரு வாரத்திற்குப் பிறகு சென்று ஏதோவொரு குறிப்புப் புத்தகத்தை வாங்கி வருகிறீர்கள்.

இந்த நிலைக்கு பெயர்தான் Bike Shed Effect. சைக்கிள் பந்தல் விளைவு என்று தமிழில் சொல்லலாம்.

அணுத் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கான ஏதுக்களை ஆராயச் சென்ற வேளை, அங்கு கூடி நின்று சைக்கிள்களை தரித்து வைக்க வேண்டிய பந்தலுக்கு என்ன நிறப்பூச்சு கொடுக்கலாம் என்று நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள் மணிக்கணக்கில் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம்.

நமது இலக்கும் குறிக்கோளும் பெரியதாக இருக்கின்ற போது, அதனை நோக்கிப் பயணிக்காது சின்னச் சின்ன விடயங்களை நோக்கி நம் கவனத்தைத் தருவதுதான் இந்த நிலை.

இந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் நாம் வாழும் சூழலிலும் நடந்து கொண்டேயிருக்கின்றன.

நீங்கள் வணிகம் ஒன்றைத் தொடங்கப் முனைந்தாலோ, புதிய உணவுப் பழக்க வழக்கத்தை தொடங்கினாலோ அது எதற்காகச் செய்கிறோம் என்ற எதுவுமே தெரியாது, அது பற்றிய எந்த அறிவுமில்லாமல், சின்னச் சின்ன விடயங்களை தூக்கிக் கொண்டு விவாதிக்க வரிசையில் ஆட்கள் வருவார்கள்.

இது வணிகத்தோடோ, உணவுப் பழக்க வழக்கத்தோடோ நின்றுவிடுவதில்லை.

அரசியல் புலம், ஆட்சியாளர்களின் செயல், கற்றலின் நிலை என எதை எடுத்தாலும், நாம் கவனிக்கப்பட வேண்டியதைத் தாண்டியும் வேறு பக்கத்திற்கு நமது அவதானம் குவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

சைக்கிள் பந்தல் விளைவுக்குள் சிக்கித் தவிக்காமலிருக்க என்ன செய்யலாம்?

ஒன்றை செய்யத் தொடங்கினால், அதன் முக்கிய நோக்கத்தை அறிந்து அதனை நோக்கிச் செல்லுங்கள்.

எல்லோரும் அறிவுரை சொல்லுவார்கள். அதனைக் கேட்டு ஆய்ந்தறிந்து நடக்கின்ற தெரிவு உங்களிடம் மட்டுமே உள்ளது என்பதை உணருங்கள்.

எதையாவது தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால், நமது நோக்கத்தில் இந்தத் தெரிவு எவ்வளவு தாக்கத்தை செலுத்தும் என்பதை கண்டறியுங்கள். அப்போது தெரிவுகள் இலகுவாகும்.

நீங்கள் சைக்கிள் பந்தல் விளைவுக்குள் செல்லாவிட்டாலும், உங்களைச் சூழ இருப்பவர்கள் அதில் சிக்கிக் கொண்டு, சின்னச் சின்ன விடயங்கள் என எல்லாவற்றுக்குள் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். கலகம் செய்து கொண்டிருப்பார்கள். முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவற்றை நீங்கள் கடந்து செல்ல பக்குவமடையுங்கள்.

வருங்காலத்தில் ஒரு தெரிவால், உங்கள் நோக்கத்திற்கு எதுவும் பாதிப்பில்லை என்று தோன்றினால், எதையும் தெரிவு செய்து, முன்னோக்கி செல்லுங்கள்.

எப்போதும் போல், தெரிவு உங்களிடம் மட்டுந்தான் இருக்கிறது.

தாரிக் அஸீஸ்
08.01.2021

உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில், உலக சனத்தொகையில், தீவிர வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் தொகையின் விகிதம் எந்தளவு மாறியுள்ளது?

உங்களுக்கான தெரிவுகள் இவைதாம்.

  1. மாறவில்லை.
  2. அரைவாசியாகக் குறைந்துள்ளது
  3. இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இவற்றுள், உங்கள் தெரிவு என்ன?

இலகுவானதுதான். இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை தெரிவு செய்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

இந்தக் கேள்வி, உலகின் பல இடங்களிலும் பல்வேறுபட்ட மக்கள் குழுக்களிடமும் கேட்ட போது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதையே அவர்களும் உறுதிப்படுத்தினர்.

இது உண்மைதானா?

இல்லை. உண்மை முற்றிலும் மாற்றமானது, ஆச்சரியம் மிகுந்தது.
அதீத வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் தொகையின் விகிதம் கடந்த 20 வருடங்களில் அரைவாசியாகக் குறைந்துள்ளது. இதுதான் உண்மையான தரவுகளின் முடிவு.

அப்படியானால், நீங்களோ மற்றயவர்களோ, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று முடிவு செய்ய என்ன காரணமாகியது?

நீங்கள் காண்கின்ற உலகம் தான் இந்த முடிவுக்கு உங்களை இட்டுச் சென்றுள்ளது.

நீங்கள் காணும் உலகம் என்பது, நீங்கள் வாசிக்கும் செய்திகள், காணும் செய்திக் காணொளிகள் ஏன் நண்பர்கள் பேஸ்புக், வட்ஸ்அப்பில் பகிரும் உருக்கமான கதைகள் என பலவற்றாலும் உருவாகிறது.

பத்திரிகையில் வறுமையால் வாடும் குடும்பங்கள் பற்றிய செய்தி மனதை பத பதைக்கிறது.

தொலைக்காட்சியில் தோன்றும் வறுமைக் காட்சிகள் நெஞ்சுக்கு வலியைத் தருகிறது. உலகமே வறுமையில்தான் வாடுகிறது என்ற முடிவுக்கு வர உங்களால் முடிகிறது.

ஊடகங்கள், உலகிலுள்ள எல்லா பிரச்சினைகளும் உங்களின் பிரச்சினையாகக் காட்டுவது போல், சமூக ஊடகங்களும் நீங்கள் காண்பதை உறுதிப்படுத்தியும் விடுகிறது.

நீங்கள் உலகத்தைப் பார்க்கும் விதம் பிழையானால், உலகத்தைப் பற்றி பிழையான அனுமானங்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள்.

மில்லியன் கணக்கில் நாளாந்தம் பகிரப்படும் போலிச் செய்திகளின் தோற்றுவாய் நீங்கள் காணும் உலகின் வெளிப்பாடாகும்.

ஸ்டீபன் கௌவ்கிங்ஸ், “அறிவின் மிகப்பெரிய எதிரி அறிமையாமை அல்ல. மாறாக அறிவைக் கொண்டிருப்பது போன்ற மாயையாகும்” என்கிறார்.

ஊடகங்களின் மூளைச்சலவைக்குள் சிக்கித் தவிக்காமலிருக்க என்ன செய்யலாம்?

எந்தத் தகவலையோ செய்தியைக் கண்டாலும் அது எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தரவுகளைத் திரட்டுங்கள்.

நீங்கள் காண்பது பற்றி, கேட்பது பற்றி உங்களுக்கு பயம் தொற்றிக் கொண்டால், தரவுகளுக்கு அங்கே இடமிருக்காது.

அதனால் அவசரப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு யாரும் வேகமாகப் ஒன்றைப் பகிர்ந்துள்ளீர்கள் என்று வெற்றிக் கிண்ணம் தரப்போவதுமில்லை.

நீங்கள் பிழையான தகவலை வேகமாகப் பரப்புவதால் வரும் பாதிப்பு பல மடங்கானது என்பதை உணருங்கள். உங்களை ஓர் நெறியாள்கை செய்கின்ற ஊடகமாக்க, தேடித் தெரிந்து ஆய்ந்தறிந்து தகவல்களை பகிருங்கள். உங்களை உலகமே பின்தொடரும்.

ஆய்தத்தை ஆயுதமாகக் கொள்ளுங்கள்.

தாரிக் அஸீஸ்
07.01.2021